ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுகிறாரா தோனி! – அவரே அளித்த விளக்கம்!
இந்த ஐபிஎல் சீசனுக்கு பிறகு தோனி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு அறிவிக்க போவதாக தகவல்கள் வெளியான நிலையில் அதுகுறித்து தோனி விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு பிறகு கிரிக்கெட் பக்கமே வராமல் இருந்த தோனி உலகளாவிய தொடர்களிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தாலும், அவர் தொடர்ந்து ஐபிஎல்லில் விளையாடுவார் என்பதால் பலரும் ஐபிஎல்லில் அவரை காணலாம் என ஆர்வத்தோடு இருந்தனர்.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனில் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெறும் தோல்வி அடைந்து ப்ளே ஆஃப் தகுதியை இழந்துள்ளது. இந்நிலையில் தோனியின் கேப்பிடன்சிக்கு பதிலாக சிஎஸ்கேவுக்கு வேறு கேப்டன் நியமிக்கப்படுவார் என்றும், இந்த சீசனுக்கு பிறகு தோனி ஐபிஎல் தொடரிலும் தனது ஓய்வை அறிவிப்பார் என்றும் பேசிக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கேவின் கடைசி போட்டி இன்று நடைபெற உள்ளது. இதில் பேட்டியளித்த தோனி “சிஎஸ்கேவிற்கு இது கடைசி போட்டி அல்ல. நாங்கள் எங்களை மேம்படுத்தி கொள்வோம். அடுத்த சீசனில் எங்கள் ஆட்டம் சிறப்பானதாக அமையும். ஐபிஎல் சீசனில் இது கண்டிப்பாக எனது கடைசி போட்டி அல்ல” என சூசகமாக கூறியுள்ளார். இதனால் தோனி ஐபிஎல் சீசனில் தற்போதைக்கு ஓய்வு அறிவிக்க போவதில்லை என ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.