இந்திய வீரர் அஸ்வின் சாதனை..! இங்கிலாந்து அணி ரன் குவிப்பு.. 2-ஆம் நாள் ஆட்டநேர ஸ்கோர் என்ன..?
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட்கள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட 238 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி உள்ளது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஐந்து விக்கெட்கள் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 445 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா 131 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களும் எடுத்தனர்.
இதை அடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் இரண்டு விக்கெட்கள் இழப்பிற்கு 207 ரன்களை குவித்துள்ளது. அந்த அணியின் துவக்க வீரர் பென் டக்கெட், அதிரடியாக விளையாடி 88 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அவர் 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். முகமது சிராஜ், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
ஜாக் கிராலியின் விக்கெட்டை கைப்பற்றிய போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 500-வது விக்கெட்களை கைப்பற்றினார். இதன் மூலம் குறைந்த இன்னிங்ஸில் 500 விக்கெட்களை கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 98 இன்னிங்ஸில் 500 விக்கெட்களை கைப்பற்றி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.