திங்கள், 20 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 4 அக்டோபர் 2024 (11:06 IST)

தோனிக்காக விதிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்… முகமது கைஃப் கருத்து!

அடுத்த சீசனில் சிஎஸ்கே அணி ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்ப்பது தோனியை சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைக்குமா என்பதைதான். அதற்குக் காரணம் தோனிக்கு தற்போது 42 வயதாகிறது. அவரை மிகப்பெரிய தொகை கொடுத்து தக்கவைத்தாலும், அடுத்த மூன்று சீசன்களையும் விளையாடுவார் என்று சொல்ல முடியாது.

இந்நிலையில்தான் டிசம்பர் மாதத்தில் நடக்கவுள்ள ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக பிசிசிஐ சில புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி சர்வதேச போட்டிகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் விளையாடாத வீரர்களை அன்கேப்ட் பிளேயராக அறிவித்துள்ளது பிசிசிஐ. இதன்மூலம் தோனி அன்கேப்ட் பிளேயர் ஆகிறார். இதனால் அவரைக் குறைந்த தொகையான 4 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைத்துக் கொள்ள முடியும். இந்த விதியால் தோனி கிட்டத்தட்ட அடுத்த சீசனில் ஆடுவது உறுதி என ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த புதிய விதியே தோனிக்காக மட்டும்தான் உருவாக்கப்பட்டுள்ளது எனக் கருத்துகளும் எழுந்துள்ளன. இதேக் கருத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃபும் தெரிவித்துள்ளார். அவர் “தோனி அடுத்த சீசனில் விளையாடப் போவதை நாம் பார்க்கப் போகிறோம். அவர் நன்றாக கீப்பிங் செய்கிறார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 200க்கு மேல் உள்ளது. அவர் ஐபிஎல் விளையாடவேண்டுமென நினைக்கும் வரை அவருக்காக விதிகளை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அத்தகையை ஆளுமை மிக்க வீரர் அவர்” எனப் பேசியுள்ளார்.