டி 20 போட்டிகளில் விராட் கோலியின் ‘மாஸ்’ சாதனையை சமன் செய்த பாண்ட்யா!
இந்தியா - வங்கதேசம் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா இரண்டு போட்டிகளையும் வென்று தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து தற்போது இரு அணிகளும் மோதும் டி 20 தொடர் தொடங்கியுள்ளது. இதன் முதல் போட்டி நேற்று குவாலியரில் நடந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 127 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி சார்பாக அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் சிறப்பாக பந்துவீசி தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதன் பின்னர் பேட் செய்ய வந்த இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அதிரடியில் புகுந்து விளாசினர். இதனால் இந்திய அணி 12 ஆவது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது. அதிகபட்சமாக இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஹர்திக் பாண்ட்யா 16 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்து கலக்கினார். இந்த போட்டியில் வந்தது முதல் அடி வெளுத்து வாங்கிய பாண்ட்யா, சிக்ஸர் அடித்துப் போட்டியை முடித்து வைத்தார்.
இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக முறை சிக்ஸ் அடித்து போட்டியை முடித்துவைத்தவர் என்ற விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார். இருவரும் தலா 5 முறை சிக்ஸ் அடித்து போட்டியை முடித்து வைத்துள்ளனர்.