வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 7 அக்டோபர் 2024 (07:44 IST)

ஹர்திக் பாண்ட்யா அதிரடி… அர்ஷ்தீப் சிங் துல்லிய பவுலிங் –முதல் டி 20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

இந்தியா - வங்கதேசம் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா இரண்டு போட்டிகளையும் வென்று தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து தற்போது இரு அணிகளும் மோதும் டி 20 தொடர் தொடங்கியுள்ளது. இதன் முதல் போட்டி நேற்று குவாலியரில் நடந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 127 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி சார்பாக அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தினர். ஹர்திக் பாண்ட்யா, மயங்க் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இதன் பின்னர் பேட் செய்ய வந்த இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அதிரடியில் புகுந்து விளாசினர். அதிகபட்சமாக இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஹர்திக் பாண்ட்யா 16 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்து கலக்கினார். இதன் மூலம் இந்திய அணி 12 ஆவது ஓவரிலேயே இலக்கை எட்டி போட்டியை வென்றது. சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்கள் வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.