இந்திய மீன்பிடி படகு மூழ்கிய இடம் தெரிந்தது: மீனவர்களை தேடும் பணி தொடர்கிறது!

Sugapriya Prakash| Last Modified புதன், 20 ஜனவரி 2021 (14:02 IST)
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில், இலங்கை கடற்படை படகுடன் மோதி விபத்துக்குள்ளான இந்திய மீன்பிடிப் படகு மற்றும் அதில் இருந்த மீனவர்களை தேடும் பணிகள் 2வது நாளாக இன்றும் நடக்கிறது.
 
இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் இந்திக்க டி சில்வா, பிபிசி தமிழுக்கு இதனைக் கூறினார். அந்த படகு மூழ்கிய இடம் தெரிந்ததாகவும், அது ஆழ்கடலுக்குள் முழுமையாக மூழ்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஆனால், அந்தப் படகில் பயணித்த மீனவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.அடுத்த கட்ட நடவடிக்கையாக, படகை மீட்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
 
கடற்படையின் சுழியோடிகள் (முக்குளிப்போர்) குழுவொன்று இந்த நடவடிக்கையில் இன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், விபத்துக்குள்ளாகி மூழ்கும் படகை தேடும் பணிக்காக கடற்படைக்கு சொந்தமான படகுகளும் மற்றும் கப்பலொன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
 
இலங்கை கடற்பரப்புக்குள் நேற்று முன்தினம் (ஜனவரி 18) இரவு சட்டவிரோதமாக நுழைந்த, 50க்கும் அதிகமான இந்திய மீன்பிடி படகுகள் யாழ்ப்பாணம் - நெடுந்தீவை அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக இலங்கை கடற்படை குறிப்பிடுகிறது.
 
இதன்போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்த இந்திய மீனவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை இலங்கை கடற்படை முன்னெடுத்ததாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறுகிறார். இதையடுத்து, இலங்கை கடற்பரப்பிலிருந்து இந்திய படகுகள் தப்பிச் சென்ற வேளையில், ஒரு படகு மட்டும் இலங்கை கடற்படையின் படகை மோதி சேதப்படுத்தியதாக அவர் குறிப்பிடுகின்றார்.
 
இந்திய படகுகள், இலங்கை கடற்படையிடமிருந்து தப்பிப்பதற்காக வழமையாகவே தமது படகை சேதப்படுத்துவதாகவும் அவர் கூறினார். இவ்வாறு நேற்று முன்தினமும் தமது படகை சேதப்படுத்தி, தப்பிச் செல்ல முயற்சித்த வேளையில், எதிர்பாராத விதமாக இந்திய படகு கடலில் கவிழ்ந்ததாக கடற்படை பேச்சாளர் இந்திக்க டி சில்வா கூறுகிறார்.
விபத்துக்குள்ளான படகில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்பது தமக்கு தெரியாது என்றும் இந்திக்க டிசில்வா கூறினார்.
 
எனினும், இந்தியாவிலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற 4 மீனவர்கள், நாடு திரும்பவில்லை என இந்திய அதிகாரிகள் தம்மிடம் கூறியதாக கடற்படை பேச்சாளர் கேப்டன் இந்திக்க டி சில்வா கூறுகிறார். இந்திய அதிகாரிகளின் தகவல்களுக்கு அமைய, விபத்துக்குள்ளான படகில் 4 மீனவர்கள் இருந்திருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிடுகின்றார்.


இதில் மேலும் படிக்கவும் :