1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 மே 2023 (12:00 IST)

வன்கொடுமை செய்தவனை கொன்ற பெண்ணுக்கு சிறை, அபராதம்! – கொதித்தெழுந்த மகளிர் அமைப்புகள்!

மெக்சிகோவில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபரை கொலை செய்த பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவின் நிஹல்கொயாட் பகுதியை சேர்ந்த 23 வயதான ரொக்ஸ்னா ருயிஸ் என்ற பெண் அங்குள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். திருமணமாகி ஒரு குழந்தை உள்ள அவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளைஞர் ரொக்ஸ்னாவுக்கு பழக்கமாகியுள்ளார்.

சம்பவத்தன்று இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் தனது வீட்டிற்கு செல்ல தாமதமாகும் என கூறி அந்த இளைஞர் ரொக்ஸ்னாவின் வீட்டிலேயே தங்கியுள்ளார். பின்னர் ரொக்ஸ்னா தனியறையில் படுத்திருந்தபோது அவரை இளைஞர் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது பாதுகாப்பிற்காக ரொக்ஸ்னா தாக்கியதில் அந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

இந்த விஷயத்தை மறைக்க நினைத்த ரொக்ஸ்னா இளைஞரை ஒரு சாக்கில் கட்டி தூக்கி வீச போனபோது போலீஸிடம் மாட்டிக் கொண்டுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு 16 ஆயிரம் அமெரிக்க டாலர்களை இழப்பீடாகவும் வழங்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு மெக்சிகோவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பிய நிலையில் ரொக்ஸ்னாவுக்கு ஆதரவாக மகளிர் அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின. இதனால் ரொக்ஸ்னா மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை திரும்ப பெற்ற நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளையும் தள்ளுபடி செய்துள்ளது.

Edit by Prasanth.K