1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

ஊட்டசத்துகள் நிறைந்த உளுந்தங்கஞ்சி செய்ய...!

உணவுமுறையில் எப்போதுமே உளுந்துக்கு முக்கியத்துவம் உண்டு. உளுந்தங்கஞ்சி, உளுந்தங்களி சாப்பிட்டால் சுருங்காத தோலும், மங்காத கண்களும், பெருக்காத இடுப்பும், தேயாத எலும்புகளும் கிடைக்கும். முதுகு வலி, இடுப்புவலி இரண்டுமே  இருக்காது. பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும்.
தேவையான பொருட்கள்:
 
உளுந்தம்பருப்பு - ஒரு டம்ளர் (கருப்பு உளுந்து)
பச்சரிசி - அரை டம்ளர்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 20 பல்லு
வெல்லம் அல்லது கருப்பட்டி - தேவையான அளவு
தேங்காய் ஒரு மூடி - துருவியது
 
செய்முறை:
 
உளுந்தம்பருப்பு (தோலுடன்), பச்சரிசி, வெந்தயம், உரித்த பூண்டு அனைத்தையும் போட்டு ஆறு டம்ளர் (பருப்பு அளந்த டம்ளரில்)  தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 8 விசில் வரும் வரை விட வேண்டும். (குக்கரின் உள்ளே பாத்திரம் வைத்துதான் வைக்க வேண்டும். அப்படியே வைத்தால் அடிப்பிடித்துவிட வாய்ப்பு உள்ளது. மேலும் தண்ணீர் வெளியே வந்துவிடும்.
 
இது தயாராவதற்குள் வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவேண்டும். தேங்காய் அரைத்து பாலும் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
 
எட்டு விசில் வந்தவுடன் இறக்கி உள்ளே இருக்கும் பாத்திரத்தை வெளியே எடுத்து சூடாக இருக்கும் போதே நன்கு மசித்துவிட்டு  வெல்லப்பாகு, தேங்காய்ப் பால் இரண்டையும் ஊற்றி சூடாக சாப்பிடவும். சிறிது தேங்காய் துருவியும் போடலாம். சுவையான சத்துள்ள உளுந்தங்கஞ்சி தயார்.