சஹால் சுழலில் சிக்கியது ஆஸ்திரேலியா - இந்தியாவுக்கு 231 ரன்கள் இலக்கு…
இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 230 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நடந்து முடிந்த 2 ஆட்டங்களில் இந்தியா ஒரு போட்டியிலும் ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
இதனால் இன்று தொடங்கிய மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா சாவாப் போட்டியாக அமைந்தது. தனது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளதால் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரையாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருந்தது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் கோஹ்லி முதலில் பந்து வீச முடிவெடுத்தார். இந்திய அணியில் அதிரடி மாற்றமாக அம்பாத்தி ராயுடு மற்றும் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு கேதார் ஜாதவ் மற்றும் சஹால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ஆஸ்திரேலிய அணியில் நாதன் லயன் மற்றும் பெஹ்ரண்டோர்ஃப் நீக்கப்பட்டு ஆடம் ஸாம்பா மற்றும் பில்லி ஸ்டேன்லேக் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காலை இந்திய நேரப்படி 7.50 மணிக்குத் தொடங்கியப் போட்டி மழையால் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் தொடங்கியதில் இருந்து இந்திய பவுலர்களே ஆதிக்கம் செலுத்தினர். தொடக்க ஆட்டக்காரர்கள் பிஞ்ச் மற்றும் காரியை புவனேஷ்வர் குமார் சிறிது நேரத்திலேயே அவுட் ஆக்கி வெளியேற்றினார்.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கவாஜா மற்றும் ஷான் மார்ஷ் மட்டும் நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடியை நிலைக்க விடாமல் சஹால் இருவரையும் அவுட் ஆக்கி வெளியேற்றினார். அதன் பின்னர் வந்த வீரர்களில் ஹான்ஸ்கோம்ப் மட்டுமே நிலைத்து நின்று அரைசதம் அடித்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சஹாலின் சுழலில் சிக்கித் தடுமாறி அவுட் ஆகி வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 48.4 ஓவர்களில் 230 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்தியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய சஹால் 10 ஓவர்கள் வீசி 42 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை சாய்த்தார். புவ்னேஷ்வர் குமார் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஹான்ஸ்கோம்ப் 58 ரன்களும் ஷான் மார்ஷ் 39 ரன்களும் கவாஜா 34 ரன்களும் சேர்த்தனர்.