வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 23 ஜூலை 2021 (17:48 IST)

டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா: கோலாகல தொடக்கம்!

கடந்த 2020ல் ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் நடைபெறவில்லை. ஜப்பானிலேயே பலத்த எதிர்ப்புக்குப் பிறகு, இந்திய நேரப்படி இன்று (ஜூலை 23) மாலை 4.30 மணிக்கு ஒலிம்பிக் போட்டிகளுக்கான தொடக்க நிகழ்ச்சிகள்  கோலாகலமாகத் தொடங்கியுள்ளன.

இந்த ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன.200-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் சார்பாக சுமார் 11,300-க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள், 33 விளையாட்டுகளைச் சேர்ந்த 339 நிகழ்வுகளில் போட்டியிட இருக்கின்றனர்.அகதிகள் அணி சார்பாக 12 விளையாட்டுகளில் 29 வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்..

இந்த டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் கராத்தே, சர்ஃபிங், ஸ்கேட்போர்டிங், பேஸ்பால் / சாஃப்ட்பால், ஸ்போர்ட் க்ளைம்பிங் ஆகிய ஐந்து விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

டோக்யோ ஒலிம்பிக் நிகழ்ச்சிகளை சோனி லைவ் செயலி வழியாகவோ, சோனி டென் விளையாட்டு தொலைக்காட்சி சேனல்கள் வழியாகவோ காணலாம். டிடி ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும் ஒலிம்பிக் போட்டிகள் ஒளிபரப்பப்படும் என ஒளிபரப்புத் துறை அமைச்சகம் கடந்த புதன்கிழமை அறிவித்தது.டோக்யோ நகரத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருப்பதால் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் கூட 1,000 பேருக்கும் குறைவானவர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங் ஆகியோர் ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வர் என தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்திருவிழா தற்போது தொடங்கியுள்ளது. இந்திய தரப்பி சுமார் 30 பேர் கொண்ட குழு தொடர்க்கவிழாவில்  பங்கேற்றனர். அப்போது, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், மன்பிரீத் சிங் ஆகியோர் தேசிய கொடியை ஏந்திச் சென்ரு அணிவகுப்பை வழிநடத்தினர்.

சமீபத்தில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று தொடக்க விழா நடைபெற்று வருகிறது.