சச்சின் தேடி வரும் தமிழர் யார்?!: கண்டுபிடிக்க ரசிகர்களிடம் கோரிக்கை!

Prasanth Karthick| Last Modified சனி, 14 டிசம்பர் 2019 (13:43 IST)
தான் நெடுநாட்களுக்கு முன்பு சந்தித்த ஹோட்டல் ஊழியர் ஒருவரை கண்டுபிடித்து தர வேண்டுமென ரசிகர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரும் மேதையாக விளங்குபவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். தற்போது ஓய்வில் இருக்கும் இவர் நடைபெற்று வரும் கிரிக்கெட் தொடர்களில் வீரர்களின் திறமை குறித்த தனது ஆலோசனைகளை பகிர்ந்து வருகிறார்.

ஆனால் மேதையாக புகழப்படும் சச்சினுக்கே அவரது விளையாட்டு முறை குறித்து ஒருவர் சொன்ன ஆலோசனைதான் அவரது கிரிக்கெட் வாழ்வில் பெரும் திருப்பு முனையாக அமைந்திருக்கிறது. ஆனால் அந்த ஆலோசனையை சொன்னவர் மிகப்பெரும் கிரிக்கெட் மேதை அல்ல! ஒரு சாதாரண ஹோட்டல் ஊழியர்.

ஆம்! சென்னைக்கு ஒரு டெஸ்ட் தொடருக்காக வந்த சச்சின் டெண்டுல்கர் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கியிருக்கிறார். அப்போது அங்கு பணிபுரிந்த ஊழியர் ஒருவர் சச்சினின் எல்போ கார்ட் குறித்து சொன்ன ஆலோசனைக்கு பிறகுதான் அதன் வடிவத்தை மாற்றி சிறப்பாக ஆடியுள்ளார். இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் அந்த ஊழியரின் நினைவு சச்சினுக்கு எழவே அவரை பார்க்க விரும்பியிருக்கிறார்.

ஆனால் தற்போது அந்த ஊழியர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. இதனால் தனது ட்விட்டரில் ரசிகர்களுக்கு இதுகுறித்து பகிர்ந்த சச்சின் டெண்டுல்கர் ” எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன சென்னை டெஸ்ட் தொடரின் போது Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன் அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன்,கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை தாஜ் கோரமண்டலில் பணிபுரிந்த அந்த ஊழியர் ஒரு தமிழர் என்றும், அவரை கண்டுபிடிக்கதான் சச்சின் தமிழிலேயே ட்வீட் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :