வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 29 செப்டம்பர் 2018 (12:36 IST)

பேட்டிங்கில் சொதப்பல்: தோனி மீது விமர்சனம்

கடந்த சில போட்டிகளாக தனது பேட்டிங்கில் சிறப்பாக செயல்படாமல் தடுமாறி வரும் இந்திய முன்னாள் கேப்டன் தோனி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி இந்தாண்டு மீண்டும் ஐ பி எல் க்கு திரும்பி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமை தாங்கி மீண்டும் மூன்றாவது முறையாக அந்த அணிக்குக் கோப்பையைப் பெற்று தந்தார்.

அந்த ஐபிஎல் தொடரில் கேப்டன்சியில் மட்டும் ஜொலிக்காமல் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார். அந்த தொடரில் 16 போட்டிகளில் அவர் 455 ரன்களை சேர்த்தார். இது ஒரு ஐபில் தொடரில் அவருடைய இரண்டாவது அதிகபட்சமாகும். அவரது சராசரி 75. ஸ்ட்ரைக் ரேட் 150. மொத்தமாகப் பார்க்கும் போது அவரின் சிறந்த ஐபிஎல் தொடர் இதுவேயென்று கூறலாம்.

ஆனால் அதன்பிறகு நடந்ததெல்லாம் சந்தோஷத்தை அளிக்கும்படி இல்லை. இந்தியா இந்தாண்டு தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக அந்த நாடுகளுக்கு சென்று விளையாடியது. இந்த இரண்டு தொடர்களிலும் தோனியின் பேட்டிங் செயல்பாடு மிகவும் மோசமாகவே இருந்தது. சொல்லப்போனால்  இந்திய அணியின் பேட்டிங்கே முதல் மூன்று வீரர்களை(ரோஹித்,தவான்,கோலி) சார்ந்தே இருந்தது. அவர்கள் சிறப்பாக செயல்படும் போட்டிகளில் வெற்றியும் அவர்கள் சொதப்பும் போட்டிகளில் தோல்வியுமே பெற்று வந்தது.

இந்நிலையில் தற்போது நடந்து முடிந்துள்ள ஆசியக்கோப்பையில் இந்தியா கோப்பையை வென்றிருந்தாலும் இறுதிப்போட்டியில் குறைந்த இலக்கை துரத்திச் சென்று கடைசிப் பந்து வரைப் போராடி வெற்றி, ஆப்கானிஸ்தானுடன் டை என சரிவுகளுக்கு இந்திய அணியின் மிடில் ஆரடர் பேட்டிங் சொதப்பலே முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. அதிலும் ரசிகர்களால் பினிஷர் என்று சொல்லப்படும் தோனியின் செயல்பாடு இந்த இரு போட்டிகளிலும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. நேற்றைய இறுதிப் போட்டியில் எளிதாக வெற்றிப் பெற்றிருக்க வேண்டிய இந்தியா கடைசிப் பந்து வரை வந்ததற்கு தோனியும் ஒரு முக்கியக் காரணம். அவர் இந்தப் போட்டியில் 67 பந்துகளை சந்தித்து வெறும் 36 ரன்களே சேர்த்தார்.

இதனால் தோனி முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளார். முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர் ‘தோனி உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி விளையாட வேண்டும். உலகக் கோப்பைக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் தோனியின் பங்களிப்பு அணிக்கு மிகவும் முக்கியமானது. தோனியின் கடந்தகால செயல்பாடுகள் வருத்தம் அளிக்கும் விதமாகவே உள்ளன. தோனியின் செயல்பாடு இப்படியே செயல்படும் பட்சத்தில் அது இந்திய அணிக்குப் பின்னடைவாகவே முடியும்’ எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

அதை உறுதிபடுத்தும் விதமாகவே 2018-ல் தோனியின் செயல்பாடுகள் உள்ளன. இந்தாண்டில் 10 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள தோனி 225 ரன்களே சேர்த்துள்ளார். அவரது சராசரி 28. ஸ்ட்ரைக் ரேட் 67. அவரது ஒட்டு மொத்த கிரிக்கெட் வாழ்க்கையில் இந்தாண்டே அவரது மோசமான ஆண்டாகும்.