செவ்வாய், 13 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 12 அக்டோபர் 2020 (07:52 IST)

காங்கிரஸ் கட்சியில் இருந்து குஷ்பு விலகுவது ஏன்? பரபரப்பு தகவல்!

காங்கிரஸ் கட்சியில் இருந்து குஷ்பு விலகுவது ஏன்? பரபரப்பு தகவல்!
திமுகவில் இருந்து பெரும் கனவுகளுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை குஷ்பூ தற்போது பாஜகவில் இணைய உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நடிகை குஷ்பு நேரடியாக ராகுல் காந்தியுடன் பேசும் அளவுக்கு அந்தக் கட்சியில் அவருக்கு செல்வாக்கு இருந்தது. அதனால் தான் அவர் கட்சியில் சேர்ந்த ஒருசில நாட்களிலேயே பதவியும் கிடைத்தது. ஆனால் அவரது செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே வருவது காங்கிரஸ் கட்சியில் உள்ள கோஷ்டிகளுக்கு பிடிக்கவில்லை
 
முதல் கட்டமாக கராத்தே தியாகராஜன் குஷ்புவை பகிரங்கமாகவே எதிர்த்தார். அதன் பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற கே.எஸ்.அழகிரிக்கும் குஷ்புவுக்கும் இடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் இருந்து வந்தன. இதன் காரணமாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குஷ்பூ தென் சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டதாகவும் அந்த வாய்ப்பு மறுக்கப்பட்ட தாகவும் கூறப்பட்டது 
 
மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் பட்டியலில் குஷ்பு பெயர் இருந்தது என்றும் ஒரு மிகப்பெரிய சக்தி அந்த பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது 
 
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை, கட்சியில் பெரிய பதவி ஏதும் இல்லை என்ற நிலையில் அதிருப்தி அடைந்த குஷ்பு காங்கிரஸில் இருந்து விலக கடந்த சில மாதங்களுக்கு முன்னரே முடிவெடுத்து விட்டதாக கூறப்படுகிறது 
 
கடந்த சில வாரங்களாக அவர் பாஜகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாகவும் பாஜகவில் அவருக்கு கவுரவமான பதவி வழங்கப்படும் என்றும் அது மட்டுமின்றி வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அவர் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டது என்றும், அதனால் தான் குஷ்பு பாஜகவில் இணைய முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது 
 
குஷ்புவின் இணைவதால் பாஜக தமிழகத்தில் வளருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்