வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 5 செப்டம்பர் 2024 (14:33 IST)

யார் குறை சொன்னாலும் தமிழ்நாடு பாடத்திட்டமே சிறந்தது.! ஆளுநருக்கு உதயநிதி பதிலடி.!!

udayanithi
நாட்டிலேயே சிறந்த கல்வி முறை தமிழ்நாடு பாடத்திட்டத்தில்தான் உள்ளது என்று தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
சென்னை அடுத்த வண்டலூரில் ஆசிரியர் தின விருது வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி, ஆசிரியர்கள் மீது எப்போதுமே திமுகவுக்கு அக்கறை உண்டு என்று தெரிவித்தார். 

மாணவர்களை சுயமாக சிந்திக்க தூண்டும் கல்விமுறைதான் சிறந்த கல்விமுறை என்றும் அந்த வகையில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சிந்திக்க வைக்கின்றன, ஏன், எதற்கு என பகுத்தறிவுடன் கேள்வி கேட்கின்ற கல்வி முறை உள்ளது என்றும் அவர் கூறினார். 
 
தமிழ்நாட்டின் கல்விமுறையை யாரும் குறை சொல்வதை ஏற்க முடியாது என்றும் அப்படி குறை சொன்னால் அது நம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அவமதிப்பதற்கு சமம் என்றும் அமைச்சர் உதயநிதி தெரிவித்தார். 

தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்தவர்கள்தான் உயர் பொறுப்புகளில் உள்ளனர் என குறிப்பிட்ட அவர், தமிழ்நாடு அரசு பள்ளிகளில் படித்த பலர் இஸ்ரோ விஞ்ஞானிகளாக பணியாற்றியுள்ளனர் என்று கூறினார். பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள் பாடதிட்டத்தை குறைசொல்கிறார்கள் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.  


தமிழக பாடத்திட்டம் குறித்து ஆளுநர் ஆர்.என் ரவி தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது