1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 2 செப்டம்பர் 2024 (14:50 IST)

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை விட மாநில பாடத்திட்டம் சிறந்தது..! ஆளுநருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி.!!

Minister Anbil Magesh
சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை விட மாநில பாடத்திட்டம் மேலானது என்று தமிழக ஆளுநருக்கு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
 
மத்திய கல்வி கொள்கையுடன் ஒப்பிடும் போது மாநில கல்வி கொள்கையின் தரம் குறைவாக உள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி விமர்சித்திருந்தார். இந்த நிலையில், மாநில அரசின் பாடத்திட்டம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியின் விமர்சனத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
 
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை விட மாநில பாடத்திட்டம் சிறந்தது என்றார். மாநில அரசின் கீழ் உள்ள பள்ளி மாணவர்களின் அனைத்து தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் பாடத் திட்டம் அமைந்துள்ளது என்றும் போட்டித் தேர்வுகளில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களே அதிகளவில் தேர்ச்சி பெறுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

6-12 வரை உள்ள மாணவர்களின் மாநில புத்தகங்களில் இருந்துதான் டிஎன்பிஎஸ்சி பயில்வோர் பயன்பெறுகின்றனர் என குறிப்பிட்ட அமைச்சர்,  போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களிடம் ஆளுநர் நேரில் சென்று பேச வேண்டும் என்று கூறியுள்ளார். ஒன்றிய அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களே 6-12 வகுப்பு பாடபுத்தகங்களைத்தான் படிக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
கல்வி தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டுமானால் ஆளுநரை எங்கும் அழைத்துச் செல்ல தயார் என்றும் மாநில பாடத்திட்டத்தின் தரத்தை அறிய ஆளுநர் ஒரு ஆணையத்தை அமைத்து ஆய்வு செய்யட்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

 
குலக்கல்வி, மும்மொழிக் கொள்கை என அனைத்தையும் மறைமுகமாக செயல்படுத்தவே ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது என்று தெரிவித்துள்ள அமைச்சர்,  கொள்கையை விட்டுக் கொடுத்து மத்திய அரசிடம் இருந்து நிதி பெற மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.