ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (13:38 IST)

"தோனி இறங்கும் போது கண்டிப்பா கேப்டனின் இந்த பாட்டுதான் போடுவாங்க".! அடித்து சொல்லும் எல்.கே சுதீஸ்..!!

LK Sudhish
IPL போட்டியில் சென்னை வீரர் தோனி களமிறங்கும் போது கேப்டனின்  இந்த பாடல்தான் நிச்சயமாக போடுவார்கள் என தேமுதிக துணைச் செயலாளர் எல் கே சுதீஸ் கூறினார்.
 
ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே தேமுதிக முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில துணை செயலாளர் எல். கே.சுதீஷ், கலந்துகொண்டு பொது மக்களுக்கு தையல் இயந்திரம், அயர்ன் பாக்ஸ், வேட்டி சேலைகள் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ள உதயநிதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். நடிகர்கள் கட்சி ஆரம்பித்து வீட்டுக்குள்ள இருந்து கொண்டு லெட்டர் பாட் மூலம் கட்சி நடத்துகிறார்கள் என்றும் ஆனால் தலைவர் கேப்டன் மதுரையில் 25 லட்சம் தொண்டர்களை அழைத்து கட்சி பெயரை அறிவித்தார் என்றும் விஜய்யை சூசகமாக சாடினார்.
 
விஜய் மாநாடு முடிந்த பின்னர்தான் அவரின் தாக்கம் அரசியலில் எப்படி இருக்கும் என தெரியும் என்று சுதீஷ் தெரிவித்தார். செப்டம்பர் 20-ம் தேதி வெளியான  லப்பர் பந்து படத்தில் நடிகர் தினேஷ் அறிமுக காட்சியில்,  விஜயகாந்த் நடித்த பொன் மனச்செல்வன் படத்தில் இடம்பெற்ற "நீ பொட்டு வச்ச தங்கக் குடம்" என்ற பாடல்  இடம் பெற்றுள்ளது என்றும் தெரிவித்தார்.

அந்த பாடல் ஒளிபரப்பபடும் போது தியேட்டர் முழுவதும் கொண்டாடுகிறது என்றும் அந்த படத்தின் இயக்குனருக்கு எனது வாழ்த்தும் நன்றியும் என்றும் குறிப்பிட்டார். IPL போட்டியில் சென்னை வீரர் தோனி வரும்போது இந்த பாடல்தான் நிச்சயமாக போடுவார்கள் என சுதீஷ் கூறினார். 

2026 தேமுதிக எந்த கட்சி கூட கூட்டணி வைக்கிறதோ அந்த கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்று அவர் தெரிவித்தார். மேலும் தேமுதிக அதிமுக இடையே பிரச்சினை ஏற்படாமல் இருந்தால் இன்று எடப்பாடி பழனச்சாமி முதல்வராக இருந்து இருப்பார் என்றும் இப்போது அதிமுக பாடம் கற்றுக் கொண்டுள்ளது என்றும் சுதீஷ் கூறினார்.