இடைத்தேர்தல் தள்ளி போனதற்கு நாங்கள் காரணமா? வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்
சமீபத்தில் ஐந்து மாநில தேர்தல் தேதியை அறிவித்த தலைமை தேர்தல் ஆணையர், தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை.
தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க மழையை பொருத்து தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையர் விளக்கமளித்தார். மழையை காரணம் காட்டி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளாத எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க ஆளும் கட்சி அச்சமடைந்திருப்பதாக விமர்சனங்கள் செய்தன.
இந்த நிலையில் பருவமழையை சுட்டிக்காட்டி தேர்தல் தள்ளிப்போனதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்புமில்லை என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். கணினி மூலம் வானிலை நிலவரத்தை கணித்து மக்களுக்கு தெரிவிப்பதாகவும், இதற்கும் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அவர் விளக்கியுள்ளார். இதனால் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில் உண்மை இருக்குமோ என்ற சந்தேகம் தமிழக மக்களிடையே எழுந்துள்ளது.