டிமாண்டி காலனி 2.0.. அசோக்நகரில் அமானுஷ்யம்!.. பீதிய கிளப்புறாங்களே!...
சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் டிமாண்ட் காலனி என்கிற பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் அமானுஷ்யம் இருப்பதாக சிலர் பீதியை கிளப்பினார்கள். அதுதான் பின்னாடி திரைப்படமாகவும் வெளியானது.
இந்நிலையில்தான் கடந்த சில நாட்களாகவே சென்னை அசோக் நகரில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் அமானுஷ்யம் இருப்பதாக சொல்லி சிலர் பீதியை கிளப்பி வருகிறார்கள். ஒருபக்கம், சிலர் ரீல்ஸ் மோகத்தில் இரவு நேரங்களில் அந்த வீட்டிற்கு சென்று வீடியோக்களை எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட தற்போது அந்த வீடு பேசும் பொருளாக மாறியிருக்கிறது..
பாழடைந்த வீடு, பழைய கார், வீட்டில் சிதறி கிடக்கும் பொருட்கள் மற்றும் பழைய புகைப்படங்கள் என அந்த வீடியோக்களை பார்ப்பவர்களுக்கு பீதி அடைகிறார்கள். அந்த வீட்டில் குடியிருந்தவர்களுக்கு என்ன ஆனது?. ஏன் பொருட்கள் சிதறி கிடக்கிறது என்பதுபற்றி தெரிந்து கொள்வோம்..
எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது அவரது ஆட்சியில் கனிமவளத்துறை அதிகாரியாக இருந்தவர் சரவணன். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் அவர் அசோக் நகரில் உள்ள அந்த வீட்டில் தனது மனைவி கஸ்தூரியுடன் தங்கியிருந்தார். அவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால் இருவரும் தனியாகவே அந்த வீட்டில் வசித்து வந்தனர்.
அதோடு வீட்டில் நிறைய பணமும், நகையும் இருந்ததாக சொல்லப்பட்டது. அந்தநிலையில்தான் கடந்த 2008ம் வருடம் சரவணன், அவரின் மனைவி கஸ்தூரி மற்றும் வீட்டின் வேலைக்காரி மூவரையும் சிலர் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். அதோடு வீட்டில் இருந்த நகை பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர். போலீசாரின் விசாரணையில் இதில் தொடர்புடைய நான்கு பேர் சிக்கினார்கள்,. நகை, பணத்திற்காக மட்டுமே இந்த கொலை நடந்ததாக சொல்லப்பட்டது..
இந்த வீட்டிற்குள் சென்று சிலர் வீடியோ எடுத்து டிமாண்டி காலனி 2.0 என்கிற தலைப்பில் வீடியோவாக பதிவிட அது வைரலானது. எனவே, அங்கு வீடியோ எடுக்க யாரையும் அனுமதிக்கக்கூடாது என பொதுமக்கள் கோரிக்க வைத்தனர். இதையடுத்து, தற்போது அந்த வீட்டில் ஒரு வீட்டின் முன்பு ஒரு காவல்துறை அதிகாரையை காவல் துறை நியமித்திருக்கிறது..