யானையை கட்டிவைத்து அடித்த பாகன்கள்; புத்துணர்வு முகாமில் கொடூரம்!
கோயம்புத்தூர் மேட்டுப்பாளையத்தில் நடந்து வரும் யானைகள் புத்துணர்வு முகாமில் பாகன்கள் யானையை கட்டி வைத்து அடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கோவில்கள் மற்றும் மடாலயங்களில் உள்ள யானைகளுக்கு மேட்டுப்பாளையத்தில் புத்துணர்வு முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமில் யானைகளுக்கு சத்தாண உணவுகள், நடைபயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் முகாமில் ஸ்ரீரங்கம் கோவில் யானை ஜெய்மல்தாவை இரண்டு பாகன்கள் மரத்திற்கு நடுவே கட்டிவைத்து பாதத்தில் மூர்க்கமாக சரமாரியாக அடிக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து அந்த பாகன்கள் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.
இதை தொடர்ந்து நடவடிக்கை எடுத்துள்ள இந்து சமய அறநிலையத்துறை அந்த இரு பாகன்களையும் பணியிடை நீக்கம் செய்துள்ளது. அதேசமயம் அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.