தமிழகத்தில் வலுக்கும் கனமழை! – 13 மாவட்டங்களுக்கு அலர்ட்!
Prasanth Karthick|
Last Modified ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (14:33 IST)
புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் மேலும் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பருவமழை காலம் முடிந்துவிட்ட நிலையில் வெப்பசுழற்சி காரணமாக சில பகுதிகளில் மிதமான அளவில் மழைபெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முதலாக கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடலூர் நகரில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் கடலூர், புதுச்சேரி பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பேகம் என்ற பெண் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நெல்லை, சேலம், தேனி, நீலகிரி, தருமபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.