ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டு, பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட வி.கே. சசிகலாவும் சிறைக்குச் சென்ற சூழலில் முதலமைச்சராகத் தேர்வுசெய்யப்பட்டவர் எடப்பாடி கே. பழனிச்சாமி. ஒரு தேர்ந்த அரசியல்வாதி.
அ.இ.அ.தி.மு.கவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்குப் பிறகு மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்தவர் ஓ. பன்னீர்செல்வம். ஆனால், முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரால் ஒருபோதும் அ.இ.அ.தி.மு.கவைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிந்ததில்லை.
ஆனால், முதலமைச்சராக வாய்ப்புக் கிடைத்த சில மாதங்களிலேயே கட்சியையும் ஆட்சியையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தவர் எடப்பாடி கே. பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமி முதல்வரானபோது, ஜெயலலிதா உயிரோடு இல்லை என்பது இதற்கு முக்கியக் காரணமாக இருந்தாலும், டி.டி.வி. தினகரன் தரப்பிலிருந்து மெல்லமெல்ல கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததன் மூலம் தன் அரசியல் சாணக்கியத்தனத்தை நிரூபித்தவர். இத்தனைக்கும் அவரது அரசியல் வாழ்வின் பெரும்பகுதி தேர்தல் தோல்விகளால் நிறைந்தது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையத்தைச் சேர்ந்த கருப்ப கவுண்டர், சவுரியம்மாள் ஆகியோரின் இரண்டாவது மகனாக 1954ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார் எடப்பாடி பழனிசாமி.
பள்ளிக்கூடப் படிப்பை முடித்த பிறகு, ஈரோடு வாசவி கல்லூரியில் விலங்கியல் இளமறிவியல் படிப்பை முடித்தவருக்கு அரசியல் மீதும் கவனம் இருந்தது. கல்லூரிப் படிப்பை முடித்த காலத்தில் எம்.ஜி.ஆர், தி.மு.கவைவிட்டு வெளியேறி அ.தி.மு.கவைத் துவங்கியிருந்தார். அ.தி.மு.கவில் சேர்ந்தார் பழனிசாமி.
கல்லூரியில் படிப்பு முடித்த பிறகு, வெல்ல கமிஷன் வியாபாரத்தில் ஈடுபட்டார் பழனிசாமி. ஆனால், அரசியல் ஆர்வம் அவரை உந்தித் தள்ளிக்கொண்டே இருந்தது. கட்சியில் காட்டிய ஈடுபாட்டையடுத்து கோணேரிபட்டி கிளைச் செயலாளராக முதன்முதலில் கட்சிப் பதவி கிடைத்தது.
எம்.ஜி.ஆர். மறைந்தவுடன் 1989ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கட்சி ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்து கிடந்தபோது ஜெயலலிதாவின் அணியில் இருந்தார் பழனிசாமி. எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்தத் தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தாலும், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.கவின் எல். பழனிசாமியைவிட 1,364 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார் எடப்பாடி.
1991ல் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் அவருக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கிறது. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பி. குழந்தை கவுண்டரைவிட 41,266 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார் பழனிசாமி.
1996 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், ஜெயலலிதாவின் ஆட்சிக்கு எதிரான அலையில், கட்சியே அடித்துச் செல்லப்பட, படுதோல்வி அடைகிறார் பழனிசாமி. அதற்குப் பிறகு பல ஆண்டுகளுக்கு அவரது அரசியல் வாழ்க்கையில் பின்னடைவுகள்தான்.
1998ல் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்றாலும், சில மாதங்களிலேயே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுவிட, 1999ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டார் எடப்பாடி.
ம.தி.மு.கவின் எம். கண்ணப்பனிடம் 4,556 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மறுபடியும் 2004ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த முறை தி.மு.கவின் சுப்புலட்சுமி ஜெகதீசனிடம் தோல்வி.
இருந்தபோதும் கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயலலிதாவுக்கு இவர் மீதிருந்த நம்பிக்கை தீரவில்லை. 2006 சட்டசபை தேர்தலில் மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டார் பழனிசாமி. அப்போது பாட்டாளி மக்கள் கட்சியின் காவேரியிடம் 6,347 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி.
1991லிருந்து 2011வரை கட்சி தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கியும் போட்டியிட்ட ஒரு தேர்தலைத் தவிர, அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வி. வேறு ஓர் அரசியல்வாதியாக இருந்தால், மனமுடைந்திருப்பார். ஒருவேளை அரசியலைவிட்டே விலகினாலும் விலகியிருப்பார். ஆனால், பழனிசாமி மனம் தளர்ந்ததேயில்லை. கட்சி செயல்பாடுகளையும் குறைத்துக்கொண்டதேயில்லை.
2011ல் மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்புக் கிடைக்கிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்வாகிறார் பழனிசாமி. இந்த முறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக அவருக்கு மேலும் ஒரு வாய்ப்பை வழங்கினார் ஜெயலலிதா.
இந்த காலகட்டத்தில், அ.தி.மு.கவின் சக்திவாய்ந்த குழுவாகக் கருதப்பட்ட நால்வர் குழுவிலும் இடம்பெற்றார் எடப்பாடி.
2016ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. மீண்டும் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார் எடப்பாடி. தோல்விகள் தொடர்ந்தபோதும் எடப்பாடிக்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்க மிக முக்கியமான காரணம், சசிகலா தரப்பின் நம்பிக்கைக்குரியவர் என்பதுதான்
ஒரு கட்டத்தில் கே.ஏ. செங்கோட்டையனையே ஜெயலலிதா ஒதுக்கிவைத்தபோது, எடப்பாடி தொடர்ந்து ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்துவந்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, உடனடியாக யாரை முதல்வராக்குவது என பேச்சு எழுந்தபோது எடப்பாடியின் பெயரும் அடிபட்டதாக தகவல் உண்டு. ஆனால், அந்தத் தருணத்தில் முதல்வருக்கான பொறுப்புகளைக் கவனித்துவந்த ஓ. பன்னீர்செல்வமே முதல்வராக்கப்பட்டார்.
ஓ. பன்னீர்செல்வத்திற்குப் பிறகு, தானும் சிறை தண்டனை பெற்று முதல்வராக முடியாத சூழலில் வி.கே. சசிகலா, அவரது நம்பிக்கைக்குரிய தேர்வாக எடப்பாடியே இருந்தார்.
ஆனால், சசிகலா மட்டுமல்லாமல் அ.தி.மு.கவில் இருந்த பலரும் எதிர்பாராத நிகழ்வு என்பது, சசிகலா - டி.டி.வி. தினகரனின் செல்வாக்கை மீறி, கட்சியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததுதான். 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி முதல்வராகப் பொறுப்பேற்றார் எடப்பாடி.
துவக்கத்தில் நிதானம் காட்டிய எடப்பாடி கே. பழனிசாமி மெல்ல மெல்ல தன்னை வலுப்படுத்திக் கொண்டதோடு, அ.தி.மு.க. அரசு நிலைத்திருக்க செய்ய வேண்டியவைகளை செய்தார். ஓ. பன்னீர்செல்வம் தரப்பை இணைத்துக்கொண்டதோடு, டி.டி.வி. தினகரன் பக்கம் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவிநீக்கம் செய்ய வைத்தார்.
பிறகு நடந்த இடைத் தேர்தலில், பெரும்பான்மைக்குத் தேவையான அளவு சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றிபெறவும் செய்தவர், தேர்தல் நெருங்கியபோது அ.தி.மு.கவின் அடுத்த முதல்வர் வேட்பாளராகவும் தன்னை அறிவிக்கச் செய்திருக்கிறார்.
காமராஜர், பக்தவத்சலம், மு. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெ. ஜெயலலிதா ஆகியோருக்குப் பிறகு அதிக நாட்கள் முதல்வராக இருந்தவர் என்ற நிலையை எட்டியிருக்கிறார் பழனிசாமி. தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, அவர் இதுவரை வெற்றிபெற்றதில்லை என்பது உண்மைதான்.
ஆனால், ஜெயலலிதாவுக்குப் பிந்தைய குழப்பமான அரசியல் சூழலில் 4 ஆண்டுகள் முதல்வர் பதவியில் நீடிப்பது என்பது சாதாரணமானதில்லை என்பதும் உண்மை.
2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பல அரசியல் கட்சிகள், தலைவர்களின் எதிர்காலத்தை முடிவுசெய்யவிருக்கிறது. அதில் எடப்பாடி கே. பழனிசாமியும் ஒருவராக இருப்பார்.
ஆனால், தமிழக அரசியல் களத்தில் இடைவெளியை நிரப்பிவிட்டு காணாமல்போகும் சாதாரண அரசியல்வாதி அல்ல அவர் என்பதை, தனது கடந்த கால செயல்களின் மூலம் நிரூபித்திருக்கிறார் எடப்பாடி கே. பழனிசாமி.