1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 29 டிசம்பர் 2021 (18:39 IST)

பாஜகவிற்கு திமுக பயப்படுகிறதா? - டிடிவி விமர்சனம்

பிரதமர் மோடி எங்கள் விருந்தாளி என திமுக கூறியது குறித்து டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 
தமிழகத்தில் திமுக எதிர்கட்சியாக இருக்கும்போது பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து #GoBackModi என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வந்தனர். தற்போது திமுக ஆட்சியில் உள்ள நிலையில் மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடி ஜனவரி 12ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழ்நாட்டுக்கு விருந்தினராக வரும் பிரதமருக்கு கறுப்பு கொடி காட்ட வேண்டியதில்லை என்கிற திமுகவின் நிலைப்பாட்டை அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, 
 
திடீர் ஞானோதயம் பெற்றிருக்கிற திமுக, பிரதமர் மோடி எங்களுக்கு எதிரி இல்லை. விருந்தினராக வருபவருக்கு கறுப்புக்கொடி காட்ட வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளதைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்தால் ஒன்று ; ஆளுங்கட்சியான பிறகு வேறொன்று என தி.மு.க போடும் இரட்டை வேடங்கள் அம்பலமாகி வருவதற்கு இது இன்னும் ஒரு சாட்சி.
 
இதற்கு முன்பு பிரதமர் தமிழகம் வந்த நேரத்தில் கறுப்புக்கொடி காட்டியதும், ‘Go Back Modi’ என்றதும்  தவறு என இதன்மூலம் இப்போது தி.மு.க ஒப்புக்கொள்கிறதா? அன்றைக்கு, ‘இதெல்லாம் தேவையில்லாத வேலை’ என்று  சொன்ன எங்களைப் போன்றவர்களைப் பார்த்து, ‘பா.ஜ.க.வைக் கண்டு பயப்படுகிறார்கள்’ என்று தி.மு.க.வினரும் அவர்களைச் சார்ந்தவர்களும் விமர்சித்தார்கள். அப்படியென்றால், இப்போது பா.ஜ.க.வையும், பிரதமர் மோடியையும் பார்த்து தி.மு.க பயந்து நடுங்குகிறது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?