வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 7 ஜூன் 2019 (19:51 IST)

ஆய்வுக்கு வர மறுத்த அதிகாரியை பலே ஐடியாவால் வரவழைத்த டி.ஆர்.பாலு மகன்!

தமிழக அரசியலில் தற்போது அடுத்த தலைமுறையினர் வளர்ந்து வரும் நிலை உள்ளது. துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மக்களவை எம்பி ஆகிவிட்டார். அதேபோல் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட பல அரசியல் வாரிசுகள் எம்பி பதவியை பெற்று டெல்லி செல்லவுள்ளனர். இன்னும் ஒருசில அரசியல்வாதிகளின் வாரிசுகள் விரைவில் அரசியலில் குதிக்கவுள்ளனர். 
 
இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலுவின் மகன் ஒரு பரபரப்பான காரியத்தை செய்து சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆக்கியுள்ளார். மன்னார்குடியில் உள்ள நீர்நிலை ஒன்றின் ஆக்கிரமிப்பை ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அந்த பகுதி வி.ஏ.ஒவிடம் டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி ராஜா கேட்டுக்கொண்டார் ஆனால் அவர் ஆய்வுக்கு வர மறுக்கவே உடனடியாக அவரது அலுவலகம் சென்று ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பு விடுத்தார். இதனையடுத்து வேறு வழியில்லாமல் அந்த அதிகாரி ஆய்வுக்கு சென்றார். இனிமேல் இதேபோல் மற்ற அதிகாரிகளிடமும் நடந்து கொள்ளவிருப்பதாக டி.ஆர்.பி ராஜா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்த டுவீட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
 
இன்று மன்னார்குடியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நீர்நிலையை ஆய்வு செய்ய சென்றபொழுது ஆய்வுக்கு வர மறுத்த ஒரு விஏஓவை நேரில் சென்று வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தேன். இனிமேலும் அதிகாரிகள் ஆய்வுக்கு வர மறுத்தால் அவர்களையும் இதே முறையில் அழைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்' என்று கூறியுள்ளார். இதே முறையை திமுகவில் உள்ள அனைவரும் கடைபிடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது