நாங்கள் அரசியல் கட்சி இல்லையே!.. ஓபிஎஸ் விரக்தி பேச்சு!....
அதிமுகவில் 3 முறை முதலமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். சசிகலா தயவால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பின், ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து அதிமுகவை வழிநடத்தி வந்தார்கள். ஆனால் உட்கட்சி பூசலால் பன்னீர் செல்வத்தின் நடவடிக்கை எடப்பாடி பழனிச்சாமிக்கு பிடிக்காமல் போக அவரை அடிமட்ட உறுப்பினர் பதவியிலிருந்தே தூக்கினார். எனவே, அதிமுகவின் மற்றொரு பிரிவாக செயல்பட்டு வந்தார் ஓ.பன்னீர்செல்வம். அவருடன் வெல்லமண்டி நடராஜன், வைத்தியலிங்கம் உள்ளிட்ட சிலர் சென்றார்கள். அதன்பின் நடந்த தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிட்டார்.
பாஜக மூலம் எப்படியாவது அதிமுகவில் இணைந்து விட ஓபிஎஸ் திட்டமிட்டார். தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக தன்னை இணைத்திடும் என்கிற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதற்கு சம்மதிக்கவில்லை. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓ.பன்னீர் செல்வம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதோடு அதிமுகவிலும் இணையவில்லை. எனவே, ஓபிஎஸ் பக்கம் இருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிமுக, திமுக, தவெக என சென்று விட்டார்கள். இன்று கூட வைத்திலிங்கம் திமுகவில் இணைந்து விட்டார்.
சில நாட்களுக்கு முன்பு செய்தியாளிடம் பேசிய ஓபிஎஸ் தை பிறந்தால் வழி பிறக்கும் என சொல்லியிருந்தார். ஆனால், இப்போது எல்லோரும் சென்றுவிட்டனர். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் பன்னீர் செல்வத்திடம் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொன்னீர்களே என்னாயிற்று? என செய்தியார்கள் கேட்டதற்கு தை இன்னும் 28 நாட்கள் இருக்கிறது என்று சொன்னார். நீங்கள் சரியான முடிவு எடுக்காததால்தான் உங்கள் கட்சியிலிருந்து எல்லாரும் வெளியேறி விட்டார்களா? என்று கேட்டதற்கு நான் எந்த கட்சியை நடத்துகிறேன்.. நாங்கள் அரசியல் கட்சியே இல்லை என்று சொல்லியிருக்கிறார்.