புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 29 அக்டோபர் 2019 (18:20 IST)

விவசாயிகள் வருமானத்தை பெருக்க புதிய சட்டம்! – தமிழக அரசு அதிரடி!

இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயிகள் வருமானத்தை பெருக்கும் வகையில் சட்டம் அமைத்து அதை செயல்படுத்தியும் சாதனை படைத்துள்ளது தமிழக அரசு.

விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் நிலையில் விவசாயிகள் பல்வேறு விஷயங்களுக்காகவும் போராட வேண்டிய நிலையே இருந்து வருகிறது. புயல் சமயங்களில் பயிர் நாசமாகும் வேளைகளில் விவசாயிகள் பெரும் துயரை அனுபவிக்கின்றனர்.

இந்நிலையில் விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்கவும், உரிமைகளை காக்கவும் தமிழக அரசு புதிய சட்டத்திட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான முறையான ஒப்புதல் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண் விளைபொருள், கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவைகள் சட்டம் எனப்படும் இந்த புதிய சட்டத்தின் மூலம் விவசாயிகள் மட்டுமின்றி கால்நடை வளர்ப்பவர்களுக்கும் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

விவசாயிகள் உணவு பதப்படுத்தும் நிறுவனத்துடன் தங்களது பொருட்களுக்கான விலையை தாங்களே நிர்ணயம் செய்து கொள்ளவும், அதிக விளைச்சல் காரணமாக ஏற்படும் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்தவும் இந்த சட்டம் வழிவகுக்கிறது. இந்த புதிய சட்டத்தை விவசாயிகள் பலர் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.