செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 29 அக்டோபர் 2019 (14:59 IST)

ஒரு குழந்தையை காப்பாற்ற முடியாத அரசு மக்களை எப்படி காப்பாற்றும்! – ஸ்டாலின் அறிக்கை!

குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின் இதற்கு அதிமுக அரசின் அலட்சியமே காரணம் என கருத்து தெரிவித்துள்ளார்.

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். 4 நாட்கள் பல மீட்புக்குழுவினர் கடுமையாக போராடியும் குழந்தையை மீட்க முடியவில்லை. சடலமாக மீட்கப்பட்ட குழந்தை சுர்ஜித் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டான்.

இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின் குழந்தைக்கு தனது அஞ்சலியை செலுத்தி கொண்டதுடன், அதிமுக அரசின் அலட்சியத்தால் குழந்தை இறந்து போனதாக குறிப்பிட்டுள்ளார். மீட்பு படையினரை அமைச்சர்கள் சுற்றி நின்று கொண்டு சரியாக செயல்படவிடாமல் செய்ததாகவும், ’80 மணி நேரம் மீட்பு பணி’ என்று அமைச்சர்கள் தங்களை விளம்பரப்படுத்தி கொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் ஒரு குழந்தையை காப்பாற்ற முடியாத அதிமுக அரசு எப்படி பேரிடர் காலங்களில் மக்களை காப்பாற்றும் என கேள்வியெழுப்பியுள்ளார். குழந்தை இறந்த சம்பவத்தை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்ய முயல்கிறார் என வேறு சில கட்சி தலைவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.