காமராஜரின் திட்டத்தை தவிடுபொடியாக்குகிறது தமிழக அரசு.. பொதுத்தேர்வு குறித்து கமல்ஹாசன் விமர்சனம்
5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்பதை தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இது காமராஜர் மற்றும் எம்.ஜி.ஆரின் திட்டங்களை தவிடுபொடியாக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
தமிழக அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் தமிழக அரசை விமர்சித்து வருகின்றனர்.
இவர்களை தொடர்ந்து நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனருமான கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். அதில், “பொது தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல், கல்வி தடைப்பட்டு வேறு வேலைகளுக்கு போனவர்கள் தான் அதிகம். இதை நான் அரசியல் நோக்கத்துடன் கூறவில்லை. இது நம்முடைய குழந்தைகளின் எதிர்காலம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், காமராஜர் மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோர் படிக்க இயலாத மாணவர்களை ஈர்த்து படிக்க வைக்க திட்டமிட்டார்கள். ஆனால் இந்த பொதுதேர்வு அந்த தலைவர்களின் திட்டங்களை தவிடுபொடியாக்குகிறது” எனவும் விமர்சித்துள்ளார். கமல்ஹாசன் இந்த விமர்சனங்களை அரசியல் நோக்கோடு முன் வைக்கவில்லை என கூறினாலும், தமிழக அரசை எதிர்த்து கமல் வைக்கும் ஒரு அரசியல் முன்னகர்வாக இது பார்க்கப்படுகிறது.