வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ்கியான்
Last Updated : சனி, 14 செப்டம்பர் 2019 (17:00 IST)

சுபஸ்ரீ உயிரிழந்தது எதிர்பாராத விபத்து - அரசு எப்படி பொறுப்பேற்கும் ? அமைச்சர் கடம்பூர் ராஜூ

சென்னை பள்ளிகரணையில் அதிமுக பிரமுகர் வைத்திருந்த பேனர் விழுந்ததில் இளம்பெண் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  
இந்த விபத்து குறித்து, லாரி ஓட்டுநர் மனோஜ் என்பரை கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் பேனர் வைத்த அதிமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு அந்த பேனரை அச்சிட்ட அச்சகத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
 
சுபஸ்ரீயின் மரணத்தால் அரசியல் கட்சி தலைவர்கள் இனி பேனர் வைக்க கூடாது என தங்களது தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல், சினிமாதுறையினருக்கும் பேனர் வைப்பதில் சமூக பொறுப்புடைமை வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் இன்று ஒரு விழாவில் கலந்துகொள்ள அதிமுக சார்பில் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜூ ஆகியோர் அழைக்கப்பட்டனர். அதற்கு,   நிகழ்ச்சியில் வைக்கப்பட்டுள்ள பேனரை கழட்டினால்தான் வருவோம் என அமைச்சர்கள் தெரிவித்ததாக செய்திகள் வெளியானது. 
 
இந்தநிலையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, சுபஸ்ரீயின் உயிரிழப்புக்கு அரசு எப்படி பொறுப்பேற்கும் எனக் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது : பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ உயிரிழந்தது எதிர்ப்பாராத விபத்து ; அதற்கு அரசு எப்படி பொறுப்பேற்கும் ? என கேட்டுள்ளார்.
 
அப்படியென்றால், ஒரு அரசு மக்களுக்கு பாதுக்காப்பு ஏற்படுத்துவதற்காகத்தான் போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை வைத்துள்ளனர். அவர்களின் கண்களின் இந்த பேனர் சிக்காமல் போனது எப்படி? சாதாரண மக்களுக்கு நடுசாலையில் வைத்த பேனர் இடையூராக,விபத்தை ஏற்படுத்தும் என கண்டுகொள்ளாமல் இருந்தது எப்படி என கேள்வி எழுகிறது.

இதில், முக்கியமாக அன்று மாலையில் நடக்கும் அதிமுக பிரமுகரின் திருமண விழாவுக்கான வரவேற்புக்காகத்தான் இந்த பேனர் வைத்திருந்ததாகவும், அது காற்றில் கழன்று, சுபஸ்ரீயின் மீது விழுந்ததில் அவர் லாரியின் டயரில் சிக்கி உயிரிழந்தது குறித்து நேற்று வெளியான சிசிடிவி கேமரா காட்சிகளில் பார்த்தோம். இப்படியிருக்க, சுபஸ்ரீயின் உயிரிழப்புக்கு அரசு எப்படி பொறுப்பேற்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கேட்டிருப்பது பொறுப்பின்மையைக் குறிக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.
 
மேலும், ஒருவேளை, இந்த பேனரை, அதிமுக பிரமுகர் நடுசாலையில் வைக்காமல் இருந்தால், சுபஸ்ரீ இன்று உயிருடன் இருந்திருப்பார்!  ஆனால்,   பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ உயிரிழந்தது எதிர்பாராத விபத்து ; அதற்கு அரசு எப்படி பொறுப்பேற்கும் ? என இப்பொழுது கேள்வி எழுப்பும் நீங்கள், இந்த பேனரை வைக்கும் பொழுது  இதை வைக்கக்கூடாது என கூறியிருக்கலாமே என்று அமைச்சருக்கு, சமூக வலைதளத்தில்  நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.