1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sv-shekhar-controversy-chinmayi-slams-comment

எஸ்.வி.சேகருக்கு பதிலடி கொடுத்த சின்மயி

s.v.sekar
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் குற்றவாளி காவல்துறையினரால் விரைந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் மற்றும் தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை குறித்துப் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த எஸ்.வி.சேகர், பொறுப்பற்ற வகையில் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
 
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தான் ஏற்கப் போவதில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். நம் வீட்டின் பீரோவைப் பூட்டாமல் திறந்து வைத்துவிட்டு, திருடன் திருடிவிட்டான் என்று கூறினால், அதற்கு எப்படிச் சட்டம் ஒழுங்கு பொறுப்பாக முடியும்? என்றார்.
 
மேலும் பெண் குழந்தைகளைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோர்களின் முழுப் பொறுப்பு என்றும், கழிவறைக்குச் செல்லும்போது கூடத் துணையாக ஆள் செல்ல வேண்டும் என்றும் கூறினார். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் எதற்காகப் புதருக்குள் சென்றார்? புதருக்குள் காவல்துறை விளக்கு போட முடியுமா?" எனப் பொறுப்பற்ற முறையில் கேள்விகளை எழுப்பினார்.  எஸ்.வி.சேகரின் இந்தப் பேச்சுக்குச் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் இருந்து கடுமையான கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
 
 
இந்த நிலையில் எஸ்.வி.சேகரின் வீடியோவை 'எக்ஸ்' வலைதளத்தில் பகிர்ந்த பிரபல பின்னணிப் பாடகி சின்மயி, அவருக்கு மிகக் கடுமையான முறையில் தனது பதிலடியைப் பதிவு செய்துள்ளார். 
 
விளாத்திகுளத்தில் அந்தப் பெண் புதருக்குச் சென்றதற்கு முக்கியக் காரணம், அந்தப் பகுதியில் முறையான கழிப்பறைகள் மற்றும் குளியலறைகள் இல்லாததே என்று சின்மயி சுட்டிக்காட்டினார். இயற்கை உபாதைகளைக் கழிக்க வேறு வழியின்றித் தான் அந்தப் பெண் அங்கு சென்றுள்ளார். இந்தியாவில் அடிப்படை சுகாதார வசதிகளின்றி, திறந்தவெளியைக் கழிப்பறையாகப் பயன்படுத்தும் நிலைப்பாட்டில் உள்ள பல இளம் பெண்களும், சிறுமிகளும் இதுபோன்று பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் கொடூரம் சர்வ சாதாரணமாக நடக்கும் ஒன்றாகிவிட்டது என அவர் வேதனை தெரிவித்தார்.
 
மேலும்  உடல் காயம் ஏற்படும் என்ற அச்சமின்றி, தாங்கள் விரும்பும் இடத்தில், விரும்பும் போதெல்லாம் பாதுகாப்பாக ஆடையின் ஜிப்பைக் கழற்றிச் சிறுநீர் கழிக்கக்கூடிய ஆண்களால், கழிவறை வசதியின்றிப் பெண்கள் எதிர்கொள்ளும் இந்த அன்றாடப் போராட்டத்தையும் ஆபத்தையும் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.
 
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் ஒத்திவைப்பு.. தவெகவில் என்னதான் நடக்குது?...