1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 27 டிசம்பர் 2019 (19:15 IST)

தீயில் கருகிய வாக்குப்பெட்டி: மறுவாக்கு பதிவு உண்டா?

வாக்குப்பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்ட 2 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 
தமிழக ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. காலையில் தொடங்கிய தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே சமயம் சின்னங்களில் குளறுபடி, கட்சியினர் இடையேயான மோதல் ஆகியவற்றால் பல பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே உள்ள பாப்பரம்பாக்கம் வாக்குச்சாவடி மையத்தில் மக்கள் வாக்களித்து வந்துள்ளனர். அப்போது திடீரென வாக்கு சாவடிக்குள் புகுந்த மர்ம நபர்கள் வாக்குப்பெட்டிகளை எடுத்து கொண்டு வெளியே சென்று , அதற்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனால் அந்த வாக்குசாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. 
 
இந்த சம்பவம் பாப்பரம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  வாக்குப்பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்ட 2 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆனால், மறுவாக்குபதிவு குறித்த தேதி எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.