முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் – வாக்குச்சீட்டால் ஏற்பட்ட சில குழப்பங்கள் !
தமிழகம் முழுவதும் இன்று முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான பெரும்பாலான இடங்களில் சுமூகமான முறையில் நடைபெற்று வருகிறது.
உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் என்பதால் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 11 மணி வரை 24 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குச்சீட்டுகளைப் பயன்படுத்துவதால் சில இடங்களில் சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு ஊராட்சியில் தலைவர் பதவிக்கான வாக்குச்சீட்டில் ஏற்கனவே முத்திரை குத்தப்பட்டு இருந்ததாக மக்கள் புகாரளிக்க அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் உருவானது.
மற்றொரு இடமான கிருஷ்ணகிரி மாவட்டம் பாவக்கல் ஊராட்சியின் 21வது வாக்குச்சாவடியில் வாக்குச்சீட்டில் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் இல்லாமல் தவறான சின்னம் பொறிக்கப்பட்டு இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது.