நீட் தேர்வுக்கு எதிராக அரசுக்கு கைக்கொடுப்போம் - சீமான்!
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்துக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நம தமிழர் கட்சி ஆதரவளிக்கும் என சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடந்த பல ஆண்டுகளாக பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியமைத்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் நீட் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்ட போது நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடரும் என கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு ரத்து குறித்த அனைத்து கட்சி ஆலோசனை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
இதற்கு ஆதரவு தெரிவித்து பேசிய அதிமுக எம்.எல்.ஏ வைத்திலிங்கம், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பிரதமரை எதிர்த்து போராட்டம் நடத்தினாலும் அதற்கு அதிமுக ஆதரவு தரும் என தெரிவித்தார். இந்நிலையில் தற்போது சீமானும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டதாவது,
கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் மருத்துவக் கனவினைச் சிதைத்தழிக்கும் நீட்' தேர்வினை திரும்பபெறச் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படுமென்று, ஆளுநர் உரை மூலம் தமிழ்நாடு அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது சற்றே ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
கொடிய 'நீட்' தேர்வினை நீக்குவதற்கான சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமெனவும், அதற்காக தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும் அனைத்து ஆக்கப்பூர்வமான நன்முயற்சிகளுக்கும் நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவை அளித்து, உறுதியாகத் துணைநிற்குமென்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.