கூட்டுறவு சங்கங்களின் முறைகேடுகள் என்ன? திமுகவுக்கு டிடிவி சரமாரி கேள்விகள்!
கூட்டுறவு சங்கங்களின் முறைகேடுகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடுக என டிடிவி.தினகரன் கோரிக்கை.
தமிழக கூட்டுறவு சங்கங்களில் நிர்வாகிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்நிலையில் அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது திமுக ஆட்சியில் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவி காலத்தை குறைக்கும் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவி காலம் 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது. இதனால் அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் நிறைவு பெறும் சூழல் உள்ளது. இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது,
நிதி மோசடிகள் நடைபெற்றதாகக் கூறி தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக அமைப்பை கலைக்க சட்டம் கொண்டுவந்துள்ள தி.மு.க. அரசு, அத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
முன்பு நடத்தப்பட்ட கூட்டுறவுத் தேர்தலில் பழனிசாமி கம்பெனியோடு 60:40 பங்கீட்டில் தி.மு.க.வினர் சேர்ந்து கொண்டுதானே ஏறத்தாழ எல்லா கூட்டுறவு சங்கங்களிலும் பதவிக்கு வந்தார்கள்?
அப்படியென்றால், கூட்டுறவு சங்கங்களில் நடந்திருப்பதாக தற்போதைய தி.மு.க. அரசு கூறும் மோசடிகளில் அவர்களது கட்சியினருக்கும் பொறுப்பு இருக்கிறதல்லவா? எந்தெந்தக் கூட்டுறவு சங்கங்களில் என்னென்ன முறைகேடுகள் நடைபெற்றன?
அதற்கு காரணமானவர்கள் யார்? என்பதைப் பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அதைச் செய்யாமல் கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலத்தை குறைப்பதாலோ, பதவிகளின் பெயர்களை மாற்றுவதாலோ அவற்றில் மலிந்திருக்கிற சீர்கேடுகளைச் சரிசெய்ய முடியாது.
மாறாக, கூட்டுறவு சங்கங்களை மொத்தமாக திமுகவினர் கபளிகரம் செய்துகொள்வதற்கே அரசின் இந்த நடவடிக்கை வழிவகுக்கும்.