1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 30 மார்ச் 2022 (15:07 IST)

ராஜகண்ணப்பனை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் - சீமான்

அமைச்சர் இராஜகண்ணப்பன் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து, அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். 

 
இது குறித்து அவர் தனது சமீபத்திய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, தன்னை சாதிரீதியாக இழித்துரைத்து, பலமுறை அவமதித்ததாக தமிழகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் இராஜகண்ணப்பன் மீது முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் புகாரளித்திருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. 
 
சாதி, மதம் என எதன்பொருட்டும், எவர் மீதும் எவ்விதப்பாகுபாடும் காட்டமாட்டேனெனப் பதவியேற்பு உறுதிமொழி எடுத்த அமைச்சரே, சாதியக்கண்ணோட்டத்தோடு அதிகாரியை அவமரியாதை செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
 
‘அரசியல் மாச்சர்யங்களை ஆட்சி நிர்வாகத்தில் ஒருபோதும் காட்டக்கூடாது’ என்றார் அறிஞர் அண்ணா. அரசியல் நிலைப்பாட்டையே ஆட்சியதிகாரத்தில் செலுத்தக்கூடாது என முழங்கியவரின் வழிவந்த கட்சியின் அமைச்சரவையிலேயே, இன்றைக்கு சாதிய ஆதிக்க மனநிலை நிலவுவதும், சமூக நீதியெனப்பேசும் கட்சியின் ஆட்சியில் அமைச்சரே, சாதியத்துவேசத்தோடு நடந்துகொள்வதுமானப் போக்குகள் வெட்கக்கேடானது.
 
‘திமுகவினரே தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்’ என அறிஞர் அண்ணா மீது சத்தியமிட்டு முழங்கிய தமிழகத்தின் முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் சாதிய மனநிலையோடு அவமதித்ததற்கு அமைச்சர் இராஜகண்ணப்பன் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்காது, துறைரீதியாக இடமாற்றம் செய்ததோடு நிறுத்திக்கொண்டது ஏமாற்றமளிக்கிறது. 
 
அமைச்சர் இராஜகண்ணப்பன் போக்குவரத்துத்துறையிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்குத் துறைமாற்றம் செய்யப்படுவது என்பது எதிர்ப்பின் வீரியத்தைக் குறைத்து மடைமாற்றம் செய்யும் யுக்திதானே ஒழிய, தவறுக்கான உகந்த நடவடிக்கையல்ல.
 
ஆகவே, அமைச்சர் இராஜகண்ணப்பன் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து வழக்குப் பதிவு செய்ய வேண்டுமெனவும், அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கம் செய்ய முன்வர வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.