வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (10:41 IST)

உணவு தனிமனித உரிமை... ஜெ.என்.யூ கலவரத்திற்கு சீமான் கண்டனம்!

அசைவ உணவு உண்டதற்காக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் தாக்குதல் தொடுப்பதா? என கேள்வி எழுப்பி சீமான் கண்டனம். 

 
நேற்று முந்தினம் ராமநவமி நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராமநவமியை முன்னிட்டு டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழக விடுதியில் அசைவ உணவு வழங்கக்கூடாது என ஏபிவிபி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
 
இதுதொடர்பாக இடதுசாரி மாணவ அமைப்புக்கும், ஏபிவிபி அமைப்பு மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. போலீஸ் வந்து கலவரத்தை அடக்கிய நிலையில் காயம்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராமநவமி கொண்டாட இடதுசாரி மாணவ அமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததே மோதலுக்கு காரணம் என ஏபிவிபி தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் இச்சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதியில் அசைவ உணவு அருந்தியதற்காக, மாணவர்கள் மீது அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொடும் தாக்குதல் தொடுத்திட்ட செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. 
 
உணவு எனும் தனிமனித உரிமையில் தலையிட்டு, அதற்காகத் தாக்குதல் தொடுத்திருக்கிற பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தைச் சேர்ந்தவர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. உணவு, உடை, வழிபாடு போன்றவையெல்லாம் தனிமனித விருப்பங்களைச் சார்ந்தவையாகும். அவற்றை மறுத்து, இடையூறு செய்வதும், அதனைக் காரணமாகக் காட்டி வன்முறைக்கு வித்திடுவதுமான மதவெறிச்செயல்கள் எதன்பொருட்டும் ஏற்புடையதல்ல. 
 
இவையாவும் இந்திய அரசியலமைப்புச்சாசனம் வழங்கும் அடிப்படை உரிமைகளையே மறுக்கும் மனித உரிமை மீறலாகும். பாஜகவின் ஆட்சியதிகாரம் தொடங்கப்பட்டக் காலத்திலிருந்து, இதுபோன்ற மோதல்களும், தாக்குதல்களும் இந்தியப்பெருநிலம் முழுமைக்கும் அதிகரித்து வருவது நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் கீழானச் செயல்களாகும்.
 
ஆகவே, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதியில் அசைவ உணவு உண்டதற்காக தாக்குதல் தொடுத்திட்ட அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது கல்லூரியின் நிர்வாக ரீதியாகவும், சட்டரீதியாகவும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.