இன்னும் சில மணி நேரங்களில்... 7 மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை!!
இன்னும் சில மணி நேரங்களில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரியவந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் வழக்கத்தை விட 3 டிகிரி அதிகமாக சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தென் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று கனமழை கொட்டியதால் அந்த பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி இன்னும் சில மணி நேரங்களில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரியவந்துள்ளது.
ஆம், அடுத்த 3 மணி நேரத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் தென்மேற்கு வங்கக் கடலில் தமிழக கடற்கரை, குமரி பகுதி, மன்னார் வளைகுடாவை ஒட்டிய பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.