வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 10 அக்டோபர் 2017 (11:03 IST)

ஆட்சியை கவிழ்ப்பது எப்படி? - தீவிர ஆலோசனையில் சசிகலா?

பரோலில் வெளிவந்துள்ள சசிகலா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை கலைப்பது எப்படி என்கிற தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
தனது கணவர் நடராஜன் உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், அவரை சந்திக்க 5 நாட்கள் பரோலில் வெளிவந்துள்ளார் சசிகலா.
 
யாரையும் சந்தித்து பேசக்கூடாது, அரசியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என சசிகலாவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், மற்றவர்கள் விரும்பினால் அவரை சந்திக்கலாம் என்கிற நிலையில், இதுவரை எந்த அமைச்சர்களும் அவரை நேரில் சந்திக்கவில்லை. எனவே, முதல்வர் உட்பட தொலைப்பேசியில் சிலரிடம் சசிகலா பேச விரும்பியதாகவும், ஆனால், அவரிடம் பேசுவதை எடப்பாடி பழனிச்சாமி தவிர்த்து வருகிறார் என நேற்று செய்திகள் வெளியானது. அதேபோல், அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் சசிகலாவிடம் தொலைப்பேசியில் பேசியதாகவும் செய்தி வெளியானது.
 
அதேபோல், சசிகலாவிடம் தொலைப்பேசி அழைப்பு வந்தால் போனை எடுத்து பேசுங்கள். தினகரன் இதுவரை என்னவெல்லாம் செய்தாரோ அது அனைத்தையும் அவரிடம் சொல்லுங்கள் என எடப்பாடி தரப்பிடமிருந்து அனைத்து அமைச்சர்களுக்கும் செய்தி அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி மீது கடுமையான கோபத்தில் இருக்கும் சசிகலா, அவரது ஆட்சியை அகற்றுவது எப்படி என தினகரன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், எதிரிகளை அழிக்கவில்ல சத்ரு சம்ஹார ஹோமமும் நடத்தப்பட்டதாக தெரிகிறது.
 
நாளையோடு பரோல் முடிவதால், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பல நிர்வாகிகளை அழைத்து ‘ உங்களுக்கு இந்த வாய்ப்பை பெற்றுத் தந்ததே நான் தான். எனக்கு துரோகம் செய்தவரோடு சேர்ந்து எனக்கு எதிராக செயல்பட்டால்..அவ்வளவுதான்’ என்கிற ரீதியில் மிரட்டல் விடுத்ததகாவும் சில பத்திரிக்கைகளில் செய்தி வெளிவந்துள்ளது.
 
ஆட்சியை கலைத்து விடலாம் எனவும், முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியை அகற்றிவிட வேண்டும் என சிலரும் அவரிடம் கருத்து தெரிவித்ததாக தெரிகிறது. அதேநேரம், தங்களை நம்பி வந்த 18 எம்.எல்.ஏக்களுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதால், கவனமாக காய் நகர்த்தப்பட்டு வருவதாக தெரிகிறது.