திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 10 அக்டோபர் 2017 (10:00 IST)

சசிகலா தொலைப்பேசியில் அழைத்தால்? - அமைச்சர்களுக்கு ஐடியா கொடுத்த எடப்பாடி

பரோலில் வெளிவந்துள்ள சசிகலா தொலைப்பேசியில் அழைத்தால் எதை பேச வேண்டும் என அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சில அறிவுரைகளும் கூறியுள்ளதாக தெரிகிறது.


 

 
தனது கணவர் நடராஜன் உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், அவரை சந்திக்க 5 நாட்கள் பரோலில் வெளிவந்துள்ளார் சசிகலா.
 
யாரையும் சந்தித்து பேசக்கூடாது, அரசியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என சசிகலாவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், மற்றவர்கள் விரும்பினால் அவரை சந்திக்கலாம் என்கிற நிலையில், இதுவரை எந்த அமைச்சர்களும் அவரை நேரில் சந்திக்கவில்லை. எனவே, முதல்வர் உட்பட தொலைப்பேசியில் சிலரிடம் சசிகலா பேச விரும்பியதாகவும், ஆனால், அவரிடம் பேசுவதை எடப்பாடி பழனிச்சாமி தவிர்த்து வருகிறார் என நேற்று செய்திகள் வெளியானது.
 
அதைத் தொடர்ந்து ஓ.எஸ். மணியனிடம் பேச விரும்பினாராம் சசிகலா. ஆனால், சசிகலாவின் நெருங்கிய உறுப்பினர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வர, என்ன செய்யலாம் என எடப்பாடியிடம் ஆலோசனை செய்தாராம் ஓ.எஸ்.மணியன். போனை எடுத்து பேசுங்கள். எத்தனை நாட்கள் அமைதியாக இருக்க முடியும். உங்கள் தரப்பு நியாயங்களை சொல்லுங்கள் என ஐடியா கொடுத்தாராம் எடப்பாடி. அதன் பின்பே சசிகலாவிடம் பேசிய ஓ.எஸ். மணியன், தன்னை கட்சியிலிருந்து நீக்கியது முதல் தினகரன் மீது பல புகார்களை கூறியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
 
அதேபோல், சசிகலாவிடம் தொலைப்பேசி அழைப்பு வந்தால் போனை எடுத்து பேசுங்கள். தினகரன் இதுவரை என்னவெல்லாம் செய்தாரோ அது அனைத்தையும் அவரிடம் சொல்லுங்கள் என எடப்பாடி தரப்பிடமிருந்து அனைத்து அமைச்சர்களுக்கும் செய்தி அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.