1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 16 மார்ச் 2024 (11:24 IST)

அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் ரூ.1,000..! அரசாணை வெளியீடு..!!

assembly
அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் இனி ரூ. 1,000 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கும் இனி மாதந்தோறும் ரூ.1000 வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 
இதுதொடர்பாக தமிழக அரசின்சமூகநலத் துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் அரசாணை வெளியிட்டுள்ளார். அதில், மூவலூர் ராமாமிர்தம் அம்மை யார் உயர்கல்வி உறுதி திட்டம் (புதுமைப் பெண் திட்டம்) வரும் கல்வி ஆண்டில் (2024-2025) அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் நீட்டிக்கப்படும் என்றும் அத்திட்டத்துக்கு ரூ.370 கோடி ஒதுக்கப்படும் என்றும் பட்ஜெட் உரையின்போது நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அறிவித்தார்
 
இதைத்தொடர்ந்து சமூகநலத் துறை ஆணையர் அரசுக்கு அனுப்பிய கருத்துரையில், தற்போது இத்திட்டத்தால் 2 லட்சத்து73 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட் டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் படிக்கும் மாணவிகளுக்கும் நீட்டித்தால் அவர்களின் மேற்படிப்பைத் தொடர்ந்து, உயர்கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை விகிதாச்சாரம் மேலும் அதிகரிக்கும்.
 
தற்போது சிறுபான்மையினர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் படிக்கும் 23,560 மாணவிகள் உள்பட அரசு உதவி பெறும் பள்ளிகளில் 49,664 மாணவிகள் மேல்நிலைக்கல்வி பயின்று வருகின்றனர். இத்திட்டத்தை வரும் கல்வி ஆண்டில், உதவி பெறும் பள்ளிகளுக்கு நீட்டிப்பதற்கு கூடுதலாக ரூ.35.37 கோடி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

 
அக்கோரிக்கையை ஏற்று ‘புதுமைப் பெண்’ திட்டத்தை 2024-2025-ம் கல்வி ஆண்டு முதல்,அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்வழியில் படிக்கும் மாணவி களுக்கும் நீட்டித்து, அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.