டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்..! டெல்லி நீதிமன்றம் உத்தரவு..!!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரப்பட்டுள்ளது.
டெல்லியில் கொண்டுவரப்பட்ட மதுபான கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆளுநர் விகே சக்சேனாவுக்கு புகார்கள் சென்ற நிலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு 2022 ஜூலையில் திரும்ப பெறப்பட்டது. இருப்பினும் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விவகாரத்தில் மணிஷ் சிசோடியா, விஜய் நாயர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அமலாக்கத் துறை இதுவரை 8 முறை சம்மன் அனுப்பியுள்ளது.
அமலாக்கத்துறை சம்மன் கலை நிராகரித்த, கெஜ்ரிவால் தேவைப்பட்டால், 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக பதில் அளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால் மீது நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனுத்தாக்கல் செய்தது.
இந்த மனுவுக்கு, இன்று ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கெஜ்ரிவாலுக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜரானார். அவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம், பிணைத்தொகையாக ரூ.15 ஆயிரம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.