1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (20:40 IST)

பட்டாசு விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி..! அரசு வேலையில் முன்னுரிமை.! உதயநிதி ஸ்டாலின்..!

Udayanithi
பட்டாசு விபத்தில் இறந்தவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அங்கன்வாடி, சத்துணவு மையங்கள் போன்ற வேலைகள் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  
 
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே குண்டாயிருப்பு பகுதியில் பட்டாசு தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் எதிர்பாராத விதமாக 10 பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா  மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
 
இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அறுதல் தெரிவித்து, நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார்.
 
udhayanithi
தொடர்ந்து செய்தியாளிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் நிதி உதவி வழங்கியதாக தெரிவித்தார்.
 
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அவர்கள் கோரிக்கைகள் முதலமைச்சரிடம் கொண்டு சேர்க்கப்படும் எனவும் அங்கன்வாடி, சத்துணவு மையங்கள் போன்ற வேலைகளில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

 
இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் சீனிவாசன், ரகுராமன், மாவட்ட ஆட்சியர் ஜெய சீலன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.