1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 27 ஜனவரி 2021 (09:24 IST)

போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த ராமதாஸ்: எதற்கு தெரியுமா?

29 ஆம் தேதி போராட்டத்திற்கு அனைவரும் வர வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். 

 
அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக வினர் தலைமையில் வன்னிய மக்கள் தங்களுக்கான தனி இட ஒதுக்கீட்டுக்காக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் காலம் என்பதால் அதிக சீட்களை வாங்குவதற்காகவே இந்த போராட்டங்களைப் பாமக முன்னெடுப்பதாக விமர்சனங்களும் உள்ளன. 
 
இந்நிலையில், வன்னியர்களுக்கு இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்ற மிகவும் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் இணைந்து நடத்தி வரும் தொடர் போராட்டங்கள் அடுத்தகட்டத்தை அடைந்திருக்கின்றன. 
அதன்படி, வரும் 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்ட தலைநகரங்களிலும், வன்னியர்களுக்கு இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர்களிடம் மனு அளிக்கப்படவுள்ளது.
 
பாட்டாளி இளைஞர்களே, பாட்டாளி சொந்தங்களே உங்களின் உழைப்புக்கும், போராட்டத்திற்கும் பயன் கிடைக்கும் நாள் நெருங்கி விட்டது. முழு உணர்வுடன் 29 ஆம் தேதி போராட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு லட்சம் பேர் பங்கேற்க வேண்டும். அதன் மூலம் நமது இடஒதுக்கீட்டு உரிமையை வென்றெடுக்க வேண்டும் என ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.