வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 15 மே 2020 (09:21 IST)

டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து சேர்ந்தது முதல் ரயில்! 797 பேர் கொரோனா சோதனைக்காக காத்திருப்பு!

தலைநகர் டெல்லியில் இருந்து புறப்பட்ட ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து சேர்ந்த 797 பேர் கொரோனா சோதனைக்காக தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளனர்.

வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அழைத்து வரும் விதமாக சிறப்பு ரயில் இயக்கப்படும் அறிவிப்புகள் வெளியாகின. தமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மட்டுமே ரயில் சேவை இருக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி டெல்லியில் இருந்து கிளம்பிய ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் 797 பேருடன் சென்னைக்கு நேற்றிரவு வந்து சேர்ந்துள்ளது.

பயணிகளில் இலவச தங்கும் விடுதியை கோரி 523 பேர் பதிவு செய்திருந்தனா். அவர்கள் அனைவரும் சென்னையை அடுத்துள்ள செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 274 பேர் தங்கும் விடுதிகளுக்காக பணம் செலுத்தி இருந்த நிலையில் அவர்களுக்கு எழும்பூரில் உள்ள ஹோட்டல்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் அழைத்து செல்ல சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்திருந்தனா். அழைத்துச் சென்ற போது, சமூக இடைவெளி முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டது.

இவர்கள் அனைவரும் கொரோனா சோதனைக்காக காக்க வைக்கப்பட்டுள்ளனர். சோதனையில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் மருத்துவமனைக்கும், நோய்த்தொற்று இல்லாதவா்கள் வீட்டுக்கும் அனுப்பி வைக்கப்படுவார்கள். வீட்டுக்கு அனுப்பப்படுபவர்கள் 14 நாட்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னைக்கு வந்த ராஜதானி எக்ஸ்பிரஸ் இன்று மாலை 1100 பயணிகளுடன் டெல்லிக்கு திரும்ப உள்ளது.