சுயேட்சையாக தேர்தலில் தோற்ற ஓபிஎஸ் திமுகவுக்கு உதவுவாரா?!. ஒரு அலசல்...
அதிமுக தொண்டர்கள் மட்டுமில்லாமல் யாரும் எதிர்பாராத வகையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவில் பலமுறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், 3 முறை முதல்வர் பதவி வகித்தவர். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் என முக்கிய பதவிகளில் இருந்தவர் இப்போது திமுகவில் ஐக்கியமாகியிருக்கிறார்.
ஓ.பன்னீர் செல்வத்தின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமியால் அதிமுகவிலிருந்து தூக்கி எறியப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைய பல முயற்சிகளையும் எடுத்தார். ஆனால் அது எல்லாவற்றையும் எடப்பாடி பழனிச்சாமி தடுத்து விட்டார்.. அந்த கோபத்தில்தான் தற்போது திமுகவில் இணைந்திருக்கிறார்.
தென் மாவட்டங்களில் கணிசமான வாக்குகளை வைத்திருக்கும் ஓபிஎஸ் திமுக கூட்டணியில் இருந்தால் அது நமக்கு பலம் என திமுக கணக்கு போடுவதாக தெரிகிறது. ஆனால், ஓபிஎஸ் வந்ததால்தான் தென் மாவட்டங்களில் பலம் கூடம் என திமுக நினைப்பது சரியான ஒன்று அல்ல என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்ட ஓபிஎஸ் திமுக கூட்டணியில் இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) வேட்பாளர் நவாஸ் கனியிடடம் 1,66,782 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஒரு முன்னாள் முதல்வரே தோற்றது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. தற்போது திமுகவில் இணைந்து அதிமுக தீவிர விசுவாசிகளுக்கு மேலும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம். கொள்கையெல்லாம் ஒன்றுமில்லை.. யார் வந்தாலும் வைத்துக்கொள்வோம் என்கிற நிலைக்கு திமுக வந்துவிட்டது என அவர்கள் சொல்கிறார்கள்.
திருவாடணை அல்லது போடி மெட்டு என ஏதேனும் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் ஓபிஎஸ் போட்டியிட வாய்ப்பிருக்கிறது. ஆனால், இரட்டை இலைக்கு போட்டு பழக்கப்பட்ட வாக்காளர்கள் உதய சூரியன் சின்னத்தில் வாக்களிப்பார்களா என்பது தெரியவில்லை. அதோடு, அந்த தொகுதிகளில் அதிமுகவுக்கு துரோகம் செய்துவிட்டு திமுகவுக்கு போய்விட்டார் என தேர்தல் பிரச்சாரம் செய்வார்கள். இதையெல்லாம் தாண்டி ஓபிஎஸ் வெற்றிபெற வேண்டும். இதுவெல்லாம் நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.