ஆன்லைன் சூதாட்டம் அழிச்சுடும்.. சீக்கிரம் எதாவது பண்ணுங்க! – ராமதாஸ் கோரிக்கை!
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழப்புகள் தொடர்ந்து வருவதால் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபட்டு பலர் உயிரிழந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. ஆனால் நீதிமன்றம் அந்த தடையை விலக்கியதால் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தொடர்ந்து வருகின்றன.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கூடல் நகரில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் அவரது வீட்டின் பின்புறம் அடித்து கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக அவரது குடும்பத்தினரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்!
முதலில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டனர், பின்னர் ஆன்லைனில் சூதாட மற்றவர்களை கொலை செய்தனர், இப்போது ஆன்லைனில் சூதாடியவர்கள் கொல்லப்படுகின்றனர். இப்படி பலவகையான குற்றங்களின் பிறப்பிடமாக ஆன்லைன் சூதாட்டம் உருவெடுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் “ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ரத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஆனால், இதுவரை எந்த விசாரணையும் இல்லை. அதனால், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்காமல், திருத்தப்பட்ட ஆன்லைன் தடை சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.