வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 18 மே 2019 (11:55 IST)

சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - கல்வெட்டு சர்ச்சையில் ஓ பி ரவீந்தரநாத் விளக்கம் !

தேனி தொகுதியில் கோயில் கல்வெட்டுகளில் தனது பெயருக்குப் பின்னால் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பொறிக்கப்பட்டது குறித்து ஓபி ரவீந்தரநாத் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதையடுத்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வரும் மே 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னராகவே தேனி தொகுதியின் அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் ஓ பி ரவீந்தரநாத் தன் பெயருக்குப் பின் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என போட்டுக்கொண்டுள்ளார்.

தேனி பகுதியில் உள்ள காசி அன்னபூரணி ஆலயத்திற்கு பேருதவி புரிந்ததாக வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில்தான் ஓ பி ரவீந்தரநாத்தின் பெயருக்குப் பின்னால் பாராளுமன்ற உறுப்பினர் என பொறிக்கப்பட்டுள்ளது. நேற்று சமூகவலைதளங்களில் இந்த கல்வெட்டின் புகைப்படங்கள் வெளியானதை அடுத்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஓ பி ரவீந்தரநாத் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குரல்கள் எழுந்தன.

இந்நிலையில் கல்வெட்டு விவகாரம் குறித்து ஓ பி ரவீந்தரநாத் இன்று விளக்கமளித்துள்ளார். அதில் ’ தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்பே இது போன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் தவறானது. எனது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.