1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 21 ஜூலை 2023 (13:27 IST)

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நினைவு தினம் இன்று.-அண்ணாமலை டுவீட்

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்று அனைவராலும் மரியாதையுடன் அழைக்கப்படுபவர் சிவாஜி கணேசன். இவர், ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில், பி.ஏ. பெருமாள் முதலியாரால்  பராசக்தி படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

அதன்பின்னர், வ.ஊ.சி, வீரபாண்டிய கட்டபொம்மன், சிவந்த மண், உத்தமபுத்திரன், கர்ணன், தேவர் மகன், முதல்மரியாதை, படையப்பா  உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி மறைந்தார்.

இவரது நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 21 ஆம் தேதி  (இன்று) கடைப்பிடிக்கப்படுகிறது. இதுபற்றி தமிழக  பாஜக தலைவர் அண்ணாமலை தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’திரைப்படங்களில், நடிப்புக்கு இலக்கணம் வகுத்த பல்கலைக்கழகம், சிம்மக் குரலோன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நினைவு தினம் இன்று.

பல்வேறு மொழிகளில், ஏறத்தாழ 300 திரைப்படங்களில் தனது நடிப்புத் திறமையைப் பறைசாற்றியதோடு, இயற்கைச் சீற்றங்களால் மக்கள் பாதிக்கப்பட்ட போதும், தாம்பரம் காச நோய் மருத்துவமனை அமைக்கவும் பெரும் நிதியுதவி செய்தவர். இந்தியா பாகிஸ்தான் போரின் போது, அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் 500 சவரன் நகையை நிதியாக வழங்கியவர்.

சுதந்திரப் போராட்ட வீரரின் மகனாகப் பிறந்து, கர்மவீரர் காமராஜரின் பக்தராக, தலைசிறந்த தேசியவாதியாக விளங்கி, பத்மபூஷன், தாதா சாகேப் பால்கே உள்ளிட்ட உயரிய விருதுகளுக்குப் பெருமை சேர்த்த சிவாஜி கணேசன் புகழை  தமிழக பாஜக சார்பாகப் போற்றி வணங்குகிறோம்’’என்று தெரிவித்துள்ளார்.