வியாழன், 15 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 6 மார்ச் 2022 (13:20 IST)

ஆயிரம் அரிதாரத்தில் வந்தாலும் தமிழகம் காப்போம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

ஆயிரம் அரிதாரத்தில் வந்தாலும் தமிழகம் காப்போம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
தமிழகத்தில் முதல்முறையாக திமுக ஆட்சியமைத்த நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் கட்சியாக தொடங்கி தேர்தலை சந்தித்து கடந்த 1967ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி அன்று முதன்முறையாக தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. பேரறிஞர் அண்ணா முதல்வராக அன்று பதவியேற்றார்.

திமுக தமிழகத்தில் ஆட்சியமைத்த நாளான இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் “தமிழர் தலைமுறை தழைக்கத் தமிழ்த்தாய் பெற்றெடுத்த பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலில் ஆட்சியமைத்த நாள் இன்று! எத்தனை சோதனைகள் - அடக்குமுறைகள் - அவதூறுகள்! அத்தனையும் கடந்து தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு எத்தனை எத்தனை சாதனைகள்!” என்று வியந்துள்ளார்.

மேலும் “இனப் பகைவரும் அவர்தம் கைக்கூலிகளும் ஆயிரம் அரிதாரம் பூசி வந்தாலும், அவர்களுக்கே உரிய பொய்யும் புரட்டும் வன்மமும் கலந்து வசை மாரி பொழிந்தாலும், தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய வழியில் தி.மு.கழகம் வாளும் கேடயமுமாகத் தமிழ் நிலத்தை என்றும் காக்கும்!” என்று கூறியுள்ளார்.