ஆறு மாதத்திற்கு மின்சார சலுகை அளிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
கொரோனா பாதிப்பால் கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் செலுத்தப்படாத நிலையில் தற்போது மின்கட்டண தொகை அதிகமாக கட்ட வேண்டிய நெருக்கடி உள்ளது குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருந்ததால் கடந்த சில மாதங்களாக மின் கணக்கீடு செய்யும் பணிகள் நடைபெறாமல் இருந்தன. இந்நிலையில் ஜனவரியில் செலுத்திய மின் கட்டண தொகையையே மற்ற மாதங்களுக்கும் செலுத்த அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது மின் கணக்கீடு செய்யப்படும் நிலையில் யூனிட் அளவு மொத்தமாக கணக்கிடப்படுவதால் மின் கட்டண தொகை அதிகமாக உள்ளது.
இதுகுறித்து நடிகர் பிரசன்னாவும் புகார் தெரிவித்திருந்த நிலையில் இதுகுறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”கடந்த நான்கு மாதங்களுக்கான மின் கட்டண அளவை இரண்டாக பிரித்து அதிக தொகை வசூல் செய்வது நியாயமாகாது” என்று தெரிவித்துள்ளார். ‘நடிகர் பிரசன்னா இதுகுறித்து கேள்வி எழுப்பியதற்கு, நியாயமான பதில் அளிப்பதற்கு பதிலாக அவரது மின் கட்டணத்தை ஆராய்ந்து அரசியல் ரீதியான அறிவிப்பாக வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’ என கூறியுள்ளார்.
மேலும் “கடந்த மாதங்களுக்கான மின் கட்டணத்தை பேரிடர் நிவாரணமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், அடுத்த ஆறு மாதங்களுக்கான மின்சாரத்திற்கு சலுகை வழங்க வேண்டும் என்றும்’ மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.