இதுதான் ஊரடங்கை செயல்படுத்தும் லட்சணமா? – ஸ்டாலின் பாய்ச்சல்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் அரசின் அலட்சிய போக்கே இதற்கு காரணம் என மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மொத்த எண்ணிக்கையில் சென்னையில் மட்டுமே 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் சாலைகளில் மக்கள் கூட்டமும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் 27,256, சென்னையில் மட்டும் 18,693. கோடம்பாக்கம், இராயபுரம், தண்டையார்பேட்டை மண்டலங்களில் பாதிப்புகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. ராஜஸ்தான், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் போன்ற பெரிய மாவட்டங்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையைவிட சென்னையின் பாதிப்பு எண்ணிக்கை அதிகம், கேரளா, ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மொத்த எண்ணிக்கையை விட சென்னையின் உள் மண்டலங்களின் பாதிப்பு அதிகம்” என்று கூறியுள்ள அவர் “அரசு இதை உணர்ந்திருக்கிறதா” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் “எண்ணிக்கையில் பாதி அளவைதான் அரசு சொல்வதாக ஊடகங்கள் எழுத தொடங்கியுள்ளன. சோதனைகள் மற்றும் முடிவுகள் உடனடியாக சொல்லப்படுவதில்லை. மரணங்கள் ஐந்து நாட்கள் கழித்துதான் சொல்லப்படுகின்றன.வேறு நோய்கள் காரணம் காட்டப்படுகின்றன என மக்கள் கருதுகின்றனர். இவை எதற்கு முதலமைச்சரிடமோ, அமைச்சர்களிடமோ பதில் இல்லை. சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இதுதான் ஊரடங்கை செயல்படுத்தும் லட்சணமா?” என கேள்வி எழுப்பியுள்ள அவர் கொரோனா சோதனைகளை வீடுகளுக்கே சென்று மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.